Tuesday, August 16, 2016

அமெரிக்க விடுதலைப்போர் பாகம் 1

அமெரிக்க விடுதலைப்போரை ஒரு சிறுக் கதைப்போல பார்க்கலாமா? வாருங்கள்... ***
அமெரிக்க அப்பம்
அமெரிக்கா, ஐநூறு வருட சரித்திரம் கொண்ட தேசம். ஐநூறு வருடங்களில், அமெரிக்கா குறைந்தது நூறு யுத்தங்களிலாவது பங்கேற்றது. உள்நாட்டு யுத்தம் தொடங்கி உலக யுத்தங்கள் வரை. வியட்நாம் யுத்தம் தொடங்கி வளைகுடா யுத்தங்கள்
வரை. பனிப்போர் தொடங்கி பாலைப்போர்கள் வரை.
அமெரிக்கா மேற்கொண்ட போர்களில் மிக முக்கியமானது, அமெரிக்க விடுதலைப் போர். அந்தப் போரில்மட்டும் அமெரிக்கா தோற்றிருந்தால் இன்றைக்கு அமெரிக்கா
இல்லை. அமெரிக்க விடுதலைப்போர் என்பது, அமெரிக்காவில் வந்து குடியேறிய பிரிட்டிஷ்காரர்கள், தங்கள் தாய்பூமியான, சொந்த நாடான பிரிட்டனுடன் நடத்தியபோர். ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த பிறகு, எல்லா ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்க அப்பத்தில் ஆளுக்கொரு பக்கம் பிய்த்துக்கொள்ளும்பொருட்டு, படையுடன் கிளம்பிவிட்டன. போர்ச்சுக்கீசியர்களும் ஸ்பானியர்களும் அமெரிக்க நிலப்பரப்பில் தம் குடியேற்றங்களை நிறுவத் தொடங்கிவிட்டார்கள்.
பதினாறாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் இங்கிலாந்து, ஹாலந்து, ஃபிரான்ஸ் நாடுகள் அமெரிக்காவில் வந்து இறங்கின. அந்தத் தேசங்களுக்கும் அங்கே ஏற்கெனவே வந்து கூடாரமிட்டிருந்த ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீசிய தேசத்தவர்களுக்கும் அடிக்கடி உரசல் உண்டாகி, தகராறாக மலர்ந்து, சண்டையாக வடிவம் பெற்று, ரத்தக் களறியில் முடிந்தன. எல்லாம் மண்ணாசை.
தென் அமெரிக்காவின் பல தங்கச்சுரங்கங்கள், பாளம் பாளமாக போர்ச்சுகீசியர்களால் எடுத்துச்செல்லப்பட்டது தான், இந்தச் சண்டைகளின் ஆதார வேர்களுள் முக்கியமானது. எல்லா நாடுகளுமே வியாபாரம் செய்வதற்குத்தான் அமெரிக்கா வந்தன. ஆனால் சண்டையில் வியாபாரம் செத்துப் போனது. பதினேழாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே ஸ்பெயினும் போர்ச்சுகலும் அமெரிக்க மண்ணில் தம் செல்வாக்கை இழக்கத் தொடங்கிவிட்டன.
டச்சுக்காரர்களும் ஃபிரெஞ்சுக்காரர்களும் தமக்கான இடம் தேடி முட்டிக்கொண்டிருக்கும் போதே இங்கிலாந்து மட்டும் ஒருவழியாக அமெரிக்க மண்ணில் தன் காலனிகளை வெற்றிகரமாக நிறுவத்தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் நிகழ்ந்த முதல் பிரிட்டிஷ் குடியேற்றம், வர்ஜீனியாவாகும்.
அப்போது இங்கிலாந்தை ஆண்டுகொண்டிருந்தவர், முதலாம் ஜேம்ஸ் என்னும் மன்னர். 1607- ல் இவரது பெயரில்தான், ஜேம்ஸ் டவுன் என்னும் சிறு நகரம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இந்த டவுனைச் சுற்றித்தான்
வர்ஜீனியா குடியேற்றப் பிரதேசம் உண்டானது.
ஒரு தேசம் அல்லது காலனி அல்லது கிராமம், நகரம் என்று எது புதிதாக உண்டானாலும் அங்கு மக்கள் வந்து வசிக்கவேண்டுமென்றால், முதலில் அவர்கள் செய்வதற்கு ஜோலி வேண்டுமில்லையா? பிழைப்புக்கு உரிய
வழி பண்ணித்தராவிட்டால் யார் வந்து வசிப்பார்கள்? அதுவும் கடல் கடந்து? தேசம் தாண்டி? கண்டம் தாண்டி?
ஆகவே மன்னர் ஜேம்ஸின் யோசனைப்படி வர்ஜீனியா பிராந்தியத்தில் நிறைய புகையிலைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த இடத்து சீதோஷணத்துக்குப் புகையிலை அருமையாக வளரும். புகையிலைத்
தோட்டங்களை வாங்கி நிர்வகிக்க, இங்கிலாந்திலிருந்து பல பிரபுக்குடும்பங்கள் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தன. கூடவே தோட்டத்தில் கூலிவேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவிலிருந்து ஏராளமான அடிமைகளையும் ‘இறக்குமதி’ செய்துகொண்டார்கள்.
இத்தனை காரியங்களையும் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு
செய்துமுடிக்க மன்னர் ஜேம்ஸ் ஒரு கம்பெனியை உருவாக்கி அனுப்பியிருந்தார். (இந்தியாவுக்குக் கிழக்கிந்திய கம்பெனியை அனுப்பியது போல.) கம்பெனி தன் வேலையைச் செம்மையாகச் செய்து
முடித்துவிட்டு, 1624 - ல் வர்ஜீனியா நிர்வாகத்தைச் சமர்த்தாக மன்னரிடம் கொடுத்துவிட்டு ஊர் திரும்பியது.
திட்டம் இதுதான். அமெரிக்கக் குடியேற்றப் பிரதேசத்தை ஒரு கவர்னர் ஆட்சி செய்வார். அவருக்கு ஆலோசனை சொல்ல ஒரு சபை. முடிவுகள் எதுவும் இங்கிலாந்தில் மட்டுமே எடுக்கப்படும். வழக்கமான ஏற்பாடுதான்.
இதைச் செய்துமுடித்த கையோடு, நியுபவுண்ட்லாந்திலும் பெர்முடாவிலும் அடுத்தடுத்து குடியேற்றங்களை நிறுவிவிட்டார்கள்.
இங்கிலாந்து மன்னரின் ஏற்பாட்டின்படி இப்படிக் குடியேற்ற நாடுகள் அமெரிக்க நிலத்தில் பெருகியது ஒரு பக்கம் என்றால், இங்கிலாந்தின் சிறைத்துறையின்பால் அதிருப்தியடைந்த அந்நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ்
ஓக்லெதொர்ஃப் என்னும் தனி நபர் ஒருவர், சிறை மீண்ட
பிரிட்டிஷ் பிரஜைகளின் புனர்வாழ்வுக்கென தனியே அமெரிக்காவில் ஒரு காலனியை அமைத்தார். அதுதான் ஜார்ஜியா. இப்படி அவர்கள் அமைத்த ஏராளமான குடியிருப்புகளில் மொத்தம் பதிமூன்று காலனிகள்
மிகச்சிறப்பானவை. அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்த அந்தப் பதிமூன்று காலனிகள் ஒருங்கிணைந்ததன் தொடர்ச்சியாகத்தான், பின்னாளில் ஐக்கிய அமெரிக்க தேசம் உண்டாயிற்று. (ஒவ்வொரு காலனி
யும் குறைந்தபட்சம் ஒரு தமிழ்நாடு, ஒரு ஆந்திரா சைஸுக்காவது இருந்தன என்பதைக் கவனிக்கவேண்டும்.)
ஒரு பக்கம் இந்த இங்கிலாந்துக் காலனிகள் என்றால் மறுபக்கம் டச்சுக்காரர்களும் ஃபிரஞ்சுக்காரர்களும் தத்தம் காலனிகளை அமைத்துக்கொண்டிருந்தார்கள். தொழில்கள் பெருகின. வேலை வாய்ப்புகள் உண்டாகின. விவசாயம் முறைப்படுத்தப்பட்டு நவீன வேளாண்மை உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இங்கிலாந்திலிருந்து வந்து குடியேறிய மக்களின் ஓரிரு தலைமுறைகள் அமெரிக்க மண்ணில் வேர்கொண்டுவிட, 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அங்கே வாழ்ந்த மக்களுக்குத் தாம் வந்தேறியவர்கள் என்னும் உணர்வு பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டது! அதாவது
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த பிரிட்டிஷ் வம்சவழியினர் தம்மை அமெரிக்கர்களாகவே உணரத் தொடங்கிவிட்டார்கள்!
இதன் விளைவு? எங்கோ தூரத்தில் உட்கார்ந்துகொண்டு அநியாயத்துக்கு அதிகாரம் பண்ணிக்கொண்டிருந்த பிரிட்டனுக்கு எதிராக அமெரிக்கர்கள் போர்க்கொடி தூக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
அமெரிக்க சுதந்தரப்போர் என்று வருணிக்கப்படும் இந்தக் கலகத்தில், அமெரிக்காவில் பிரிட்டனால் உருவாக்கப்பட்ட பதிமூன்று காலனி நாடுகளும் பிரிட்டனுக்கு எதிராகக் களமிறங்கின! நம்பமுடியாத சரித்திர
நிஜம் இது.
அட்லாண்டிக் கடலெங்கும் ரத்த அலை பொங்கச் செய்த அந்தப்போரே ஓர் ஆச்சரியம் என்றால், போரின் விளைவு இன்னொரு மகத்தான ஆச்சரியம்.
உண்மையில் அமெரிக்க சரித்திரம் என்பது இந்தப் போரிலிருந்துதான் தொடங்குகிறது. அமெரிக்காவில் வந்து குடியேறிய பிரிட்டிஷார் அத்தனை பேரும் தம்மை அமெரிக்க மண்ணின் மைந்தர்களாகவே கருதிக்கொண்டு, தாய்நாட்டை எதிர்த்துப் போரிடத்தொடங்கிய அந்தச்
சம்பவம் உலக சரித்திரத்திலேயே முதலும் முடிவுமாக நடைபெற்ற ஒரு விநோதமான யுத்தம்.
பொதுவாக யுத்தம் என்று வந்தால் பிளவுகள் தான் நிறைய தோன்றும். ஆனால் அமெரிக்க யுத்தம் அன்று ஓர் உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டியது. நெருக்கடி நேரத்தில் அமெரிக்கா முற்றிலும் வேறு ஜாதி என்பதே அது.
பதிமூன்று குடியேற்ற தேசங்களும் ஒட்டுமொத்தமாக அப்போது ஒன்றிணைந்தன. இனி எக்காரணம் கொண்டும் பிரிந்துவாழ்வதில்லை என்று முடிவு செய்தன. பிரிட்டனைப் போரில் வென்றன. தம் தனி
தேச அடையாளங்களைத் துறந்து, அமெரிக்க ஐக்கிய நாடாக மாறின!
தொடறும்....

No comments:

Post a Comment