Friday, August 19, 2016

அமேரிக்க விடுதலைப் போர் பாகம் 2

இதோ அடுத்த பதிவு! டீ பார்ட்டி
அந்தத் துறைமுகம் ஜகஜ் ஜோதியாக இருந்தது. இரவின் ஒளியில்
நீர்ப்பரப்பு தகதகத்துக்கொண்டிருந்தது. போதிய இடைவெளியில் நாலைந்து கப்பல்கள் நின்று கொண்டிருந்தன. எல்லாம் இந்தியாவிலிருந்து வந்த கப்பல்கள். ஒவ்வொரு கப்பலிலும் மூட்டை
மூட்டையாகத் தேயிலை. இருநூறு வருஷங்களுக்கு முன்பே அவற்றின்
மதிப்பு பல லட்சங்கள். அமெரிக்காவில் இருந்த அத்தனை பிரிட்டிஷ்
காலனி நாடுகளுக்கும் சுமாராக ஒருவருஷத்துக்குத் தேவையான
தேயிலை மூட்டைகள் அவை.
இந்தியாவும் அப்போது ஒரு பிரிட்டிஷ் காலனிதான் இல்லையா? ஆகவே இந்தியாவில் கணக்கு வழக்கில்லாமல் விளையும் தேயிலையை அமெரிக்காவுக்கு எடுத்துப் போவதன் மூலம் நிறைய விஷயங்களில் பிரிட்டனுக்கு லாபம் இருந்தது.
ரொம்ப முக்கியமான லாபம், நிறையத் தேயிலை மூட்டைகளை எடுத்துப் போய் அமெரிக்க மண்ணில் நிரப்பி விட்டால், அங்கே தேயிலையின் விலை படுத்துவிடும். மக்களுக்குக் குறைந்த விலையில் தேயிலை கிடைக்கும். அந்தக் கணக்கைச் சரிக்கட்டும்விதமாக, அமெரிக்காவில்
இறங்கும் தேயிலை மூட்டைகளுக்கு வரி விதிக்கலாம் என்பது பிரிட்டனின் திட்டம். (லார்டு நார்த் என்னும் பிரிட்டிஷ் நிதியமைச்சர் உருவாக்கிய திட்டம் இது!)
இந்தத் தந்திரம் அமெரிக்கக் காலனி நாடுகளுக்கு மிகுந்த எரிச்சலைத்தந்தன. ஏதாவது செய்து பிரிட்டனைப் பழிவாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
அது பாஸ்டன் துறைமுகம். அங்கேதான் இந்தியாவிலிருந்து தேயிலை மூட்டைகளை எடுத்து வந்த கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. கப்பல்களிலிருந்து மூட்டைகள் ஊருக்குள் வந்துவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது.
ஆகவே, நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தார்கள். ஒரே வழி. அமெரிக்க ஆதிவாசிகளான
செவ்விந்தியர்கள்போல் வேடம் அணிந்து இரவோடு இரவாகத் துறைமுகத்தில் நுழைந்து கப்பல்களில் ஏறினார்கள்.
பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தேயிலை மூட்டைகளை எடுத்துக் கடலில் வீசத்தொடங்கினார்கள்!
கரையிலிருந்து தற்செயலாக இதைக் கவனித்த பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரிகள் நிலைகுலைந்து போனார்கள். தொண்டைக் கிழியக் கத்த ஆரம்பித்தார்கள்: ‘ஓ, மடையர்களே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்?‘
‘நாங்களா? அமெரிக்கக் காலனிகளின் மேல் அக்கறை பொங்கிவழியும் பிரிட்டனுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, டீ பார்ட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறோம்!’
‘பாஸ்டன் தேநீர் விருந்து’ என்று இந்தச்சம்பவம் சரித்திரத்தில் இடம் பெற்றதெல்லாம் பின்னால் நடந்த கதை. அமெரிக்க சுதந்தரப் போராட்டத்துக்கு இதுதான் முக்கியக் காரணம் என்று பள்ளிக்கூடப் புத்தகங்கள் சொல்லிக்கொண்டிருக்கும்.
ஆனால், உண்மையில் இதைவிட மிக முக்கியமான பல காரணங்கள் உண்டு.
அதற்கு முன்னால், அமெரிக்க சுதந்தரப் போருக்கும் மற்ற தேசங்களின் (இந்தியா உள்பட) சுதந்தரப் போருக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். இது ரொம்ப முக்கியம். வித்தியாசங்கள் பல என்றாலும் ஒற்றுமை ஒண்ணே ஒண்ணுதான். பெரும்பாலான தேசங்கள் இங்கிலாந்துக்கு எதிராகத்தான் போராடியிருக்
கின்றன என்பதே அது! நூறு, நூத்தைம்பது வருஷத்துக்கு முன்னால் வரை வல்லரசு என்றால் இங்கிலாந்துதான். பின்னால் அணு ஆயுதங்கள் புழக்கத்துக்கு வந்துவிட்ட பிறகு, வர்த்தகம் உலகளாவிய பிறகு, டாலர் ஆளத்தொடங்கிய பிறகு, ‘வல்லரசு’ என்கிற சொல்லுக்கான
இலக்கணங்கள் மாறிவிட்டன.
விஷயத்துக்கு வருவோம். அமெரிக்காவில் இருந்த பிரிட்டிஷ் காலனிகளுக்கும் பிரிட்டனுக்கும் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலேயே நிறைய விஷயங்களில் ஒத்துவரவில்லை. பொதுவாகக் கல்யாணம் ஆகிப் போன பெண்ணுக்கும் மாமியாருக்கும் தானே ஒத்துவராது? இங்கே தலைகீழ்க் கதை. பெண்ணுக்கும் அவள் அம்மாவுக்கும் ஒத்துவரவில்லை. பெண்ணுக்கு மாமியாரை ரொம்பப் பிடித்திருந்தது!
என்ன ஒரு விநோதம்! ஆனால் விஷயம் இருக்கிறது.
அமெரிக்காவில் குடியேற்ற நாடுகளை (காலனிகள்) நிறுவிய பிரிட்டன், அங்கே ஆட்சிநடத்த சில அமைப்புகளை உண்டாக்கியிருந்தது. முதலாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆளும் சபை. நம் சட்டசபை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் அச்சு
அசலான சட்டசபை இல்லை. கொஞ்சம் வேறு மாதிரி.
இந்தச் சபை சட்டங்கள் தீட்டும். திட்டங்கள் தீட்டும். ஓட்டுப்போடும். எல்லாம் செய்யும். ஆனால் எல்லாவற்றையும் இங்கிலாந்தில் உட்கார்ந்துகொண்டிருக்கிற
மகாராஜா ஓகே சொல்லியாகவேண்டும். இங்கிலாந்து பாராளுமன்றம் ஏதாவது சட்டம் போட்டாலும் இந்தச்சபை ஏற்றுக்கொண்டாகவேண்டும். ஆனால் இந்தச் சபைபோடும் சட்டங்களை (சத்தங்களையும்!) இங்கிலாந்து
ஏற்றுக்கொண்டாகவேண்டிய கட்டாயம் ஒன்றும் கிடையாது!
இங்கிலாந்து ஏஜெண்ட் மாதிரி ஒவ்வொரு குடியேற்ற நாட்டிலும் ஒரு கவர்னர் இருப்பார். அவருக்குச் சோறு போட்டு, வீடு கொடுத்து, மற்ற பல வசதிகளையும் செய்து கொடுத்து, மாசாமாசம் சம்பளமும் கொடுத்து வைத்துப் பராமரிக்கவேண்டிய பொறுப்பு, அந்தந்தக் குடியேற்ற
நாட்டு ஆளும் சபையினுடையது.
பிரச்னையே இங்கேதான்! இத்தனை செய்யும் சபைக்கு விசுவாசமாக கவர்னர் நடந்து கொள்வாரா என்றால் மாட்டார்! அவரது விசுவாசமெல்லாம் இங்கிலாந்துக்குத்தான்! அங்கிருந்து என்ன சொல்கிறார்களோ, அதைத்தான் அவர்செய்வார். இதைச் செய் என்றால் செய்வார். அதைச் செய்யாதே என்றால் செய்யமாட்டார். பேசு என்றால் பேசுவார். பேசாதே என்றால் காலவரையறையற்ற மௌனவிரதம் மேற்கொண்டுவிடுவார். மக்கள் சபை கொண்டுவரும் திட்டங்களையெல்லாம் சுருட்டித் தன் பைப்பில் திணித்து சொகுசாகப் புகை விடுவார். அவர்களுக்கு ஆதரவாக ஏதாவது மேலிடத்தில் சொல்லி நல்லது பண்ணுவாரா என்றால் கண்டிப்பாக மாட்டார்!
என்ன செய்வது? உலகம் முழுக்க மாமியார்மருமகள்; மாநில அரசு கவர்னர் உறவுகள் இப்படித்தான் இருந்திருக்கின்றன, காலம் காலமாக!
இதனால் குடியேற்ற நாடுகள் மிகவும் கடுப்பாயின. கவர்னரை மீறி அவர்களால் இங்கிலாந்துக்கு எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை. வேண்டியதைக் கேட்டுப் பெறவும் வழியில்லை. சரி; இங்கிலாந்துப்
பாராளுமன்றத்திலாவது குடியேற்ற நாடுகளுக்கென ஒரு பிரதிநிதியை நியமிக்கக்கூடாதா என்று மன்றாடிப் பார்த்தார்கள்.
ம்ஹூம். அசைகிற வழியாகக் காணோம். போதாத குறைக்கு இங்கிலாந்து பாராளுமன்றம், அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கான சட்டங்கள் என்று குயர் குயராக எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.
பார்த்தார்கள்... இதெல்லாம் சரிப்படாது என்று, இங்கிலாந்திலிருந்து வரும் எந்தச் சட்டத்தையும் அமல்படுத்த முடியாது என்று குடியேற்ற நாடுகளின் மக்கள் சபையினர் தீர்மானித்து விட்டார்கள்.
போருக்கு இது மிக முக்கியமான காரணம்.
சில பர்சண்டேஜ் முக்கியத்துவம் குறைவான காரணங்களும் இருக்கின்றன.
அவற்றுள் முக்கியமானது, குடியேற்ற நாடுகளின் பாதுகாப்புப் பிரச்னை. ஏற்கெனவே இங்கிலாந்து தவிர,
ஃபிரான்ஸும் ஹாலந்தும்கூட அமெரிக்காவைக் கூறு போடும் முயற்சியில் இருந்தன என்று பார்த்தோ மல்லவா? அந்த நாடுகளும் அங்கே ஓரிரு இடங்களை வளைத்துப்போட்டு, தத்தம் காலனிகளை நிறுவியிருந்தன. (ஆங்கிலேயர் ஆட்சியின்போதே இங்கே பாண்டிச்சேரி முதலான சில பகுதிகளில் ஃபிரெஞ்சு ஆட்சி இருந்தது போல.)
கிடைத்த நிலம் போதாமல் அந்த நாடுகள் மேலும் இடத்தை அபகரிக்க அவ்வப்போது பிரிட்டிஷ் காலனிக்கு உள்பட்ட பிராந்தியங்களின்மீது படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். மறுபுறம், அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் அவ்வப்போது விஷ
அம்புப் போர் தொடுத்து, பிரிட்டிஷ் காலனிக்குள்பட்ட கிராமப்புறங்களில் நிறைய பலி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
இந்தத் தலைவலிகளிலிருந்து தப்பிக்க, நியாயமாகக் காலனி தேசங்கள் ஒன்றுசேர்ந்து ஏதாவது உருப்படியான வழி செய்திருக்கவேண்டும்; ஆனால் செய்யவில்லை. ஆகவே குடியேற்ற நாடுகளின் பாதுகாப்புக்காக, ஒரு ராணுவத்தையும் கப்பல்படையையும் உருவாக்க பிரிட்டன்
முடிவு செய்தது.
நல்ல விஷயம்தான். ஆனால் அதிலும் ஒரு பொடி வைத்தார்கள். படையை நாங்கள் அமைத்துத் தருகிறோம். செலவின் ஒரு பகுதியை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்!
இந்த மகத்தான யோசனையைக் கூறியவர் பிரிட்டிஷ் அமைச்சர் க்ரென்வில் (Grenville) என்பவர். யோசனையை அமல்படுத்த, 1765- ம் ஆண்டு முத்திரைச் சட்டம் என்றொரு சட்டத்தைக் கொண்டுவந்தது பிரிட்டிஷ் பாராளுமன்றம். இதன்படி எல்லாப் பத்திரங்களும் பிரிட்டிஷ் முத்திரையிடப்பட்ட தாளில் தான் எழுதப்படவேண்டும். பச்சையாகச் சொல்வதென்றால், பிரிட்டன், தன் காலனி தேசங்களின்மீது நேரடியாக வரி விதிக்க உதவுகிற சட்டம் இது.
சும்மா விடுமா காலனி நாடுகள்? ‘பாராளுமன்றத்தில் எங்களுக்குப் பிரதிநிதி இல்லாதபோது, எங்களுக்கு வரி விதிக்க பிரிட்டனுக்கு எந்த ரைட்ஸும் இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டன. (No taxation without representation).
இது பெரிய ரகளையாகிவிட்டது. க்ரென்வில்லிக்கு பிறகு பதவியேற்ற அமைச்சர் ராக்கிங்ஹாம் வேறு வழியின்றி இந்தச் சட்டத்தை ரத்துசெய்தார். ஆனால், குடியேற்ற நாடுகளின்மீது பிரிட்டன் வரி விதிக்கும் உரிமை பெற்றிருப்பதாகப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு அர்த்தம், ‘இப்போது முத்திரைச்சட்டத்தை வாபஸ் பெறுகிறோம்; ஆனால் நாளைக்கு இதைவிட பேஜாரான இன்னொரு சட்டம் வரக்கூடும்’ என்பது தான்!
சட்ட அமைச்சர் இப்படியென்றால், பிரிட்டனின் அப்போதைய நிதி அமைச்சர் இன்னொரு காரியம் செய்தார்.
குடியேற்ற நாடுகளின் பாதுகாப்புக்காக ராணுவமும் கடற்படையும் அனுப்ப முடிவு செய்தார்களல்லவா? அந்தத் தொகையைப் பெற தேயிலை போன்ற சில பொருள்களின் மீது வரி விதித்தார். அதாவது அமெரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டு போகப்படும் பொருள்களின் மீது இந்த வரி. துறைமுகங்களிலேயே ரைட் ராயலாக வசூலித்துவிடுவார்கள்.
காலனி அரசுகள் இதையும் எதிர்த்தன. ஆகவே லார்ட் நார்த் என்னும் அடுத்த நிதியமைச்சர், இந்தியாவிலிருந்து அமெரிக்கா கொண்டு போகப்படும் தேயிலை மூட்டைகளை உத்தேசித்து இன்னொரு தேயிலைச் சட்டம் வகுத்தார். அந்தச் சட்டத்தின் விளைவைத்தான் இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் பார்த்தோம்.
பாஸ்டன் துறைமுகத்தில் நடந்த கலாட்டா உண்மையில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. அது பிரிட்டனின் தன்மானத்தின் மீது விழுந்த அடி.
அன்றைய உலக நாடுகள் அனைத்துமே இங்கிலாந்துக்கு இருபத்திநாலு மணிநேரமும் சலாம் போட்டுக்கொண்டிருக்க, கேவலம், பிரிட்டனின் சொந்தக் காலனிகள் சில ஒன்றுசேர்ந்து அவமானப்படுத்துவதா?
ஆகவே சும்மா இருப்பதில்லை என்று முடிவு செய்தார்கள். உடனே அமெரிக்கக் காலனி நாடான மாசாஸு
ஸெட்ஸுக்கு அளிக்கப்பட்டிருந்த அத்தனை உரிமைகளையும் பிரிட்டன் ரத்து செய்தது.
போருக்கான உடனடிக் காரணமாக இதுவே ஆனது.
இன்னும்கூடச் சில காரணங்கள் உண்டு. வியாபார விஷயங்களில் பிரிட்டன் விதித்த நிபந்தனைகள் மனுஷ ஜென்மமாகப் பிறந்த யாருமே ஏற்கக் கூடியதாக இல்லை அப்போது. ஏகப்பட்ட நிபந்தனைகள்.
பிரிட்டனைத் தவிர வேறு எந்தத் தேசத்துடனும் குடியற்ற நாடுகள் நேரடி வர்த்தகம் செய்யக் கூடாது; பிரிட்டிஷ் கப்பல்களில் தான் சரக்குகளைக் கொண்டு போகவேண்டும் என்று தொடங்கி பல சட்ட அபத்தங்களை விதித்தது. சட்டம் என்றால் சட்ட மீறல் என்பதும் உண்டல்லவா?
ஆகவே கள்ள வியாபாரம் வெள்ளமெனப் பெருகத் தொடங்கிவிட்டது.
மாசாஸுஸெட்ஸ் குடியேற்றப் பகுதியின் உரிமைகளை பிரிட்டன் ரத்து செய்ததுமே மற்ற அனைத்து காலனிகளும் முழுதாக விழித்துக்கொண்டுவிட்டன.
உடனே (1774- ல்) ஃபிலடெல்பியாவில் ஒரு சர்வ காலனி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார்கள். ஜார்ஜியா தவிர அனைத்து காலனி தேசங்களும் அதில் கலந்துகொண்டன. அங்கே இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஒன்று, பிரிட்டன் பகலுக்கொன்று, இரவுக்கொன்று என்று தினசரி கொண்டுவரும் புதுச்சட்டங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படவேண்டும்.
இரண்டு, இது நடக்கும்வரை பிரிட்டனுடன் வியாபாரத் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்படும்.
இரண்டும் வேலைக்கு ஆகவில்லை. பிரிட்டன்தான் பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால்தான் என்று தொடர்ந்து வாதாடிக்கொண்டிருந்தது. பாஸ்டனில் தங்கியிருந்த பிரிட்டிஷ் படை, காலனி நாடுகள் போருக்குத்
தயாராவதைக் கண்டு, அதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தது.
வேறு வழியே இல்லை என்னும் நிலை உண்டானது, 1775- ல். குடியேற்ற நாடுகள் அனைத்தும் அமெரிக்கப் பிள்ளையார் சுழிபோட்டு லெக்ஸிங்டன் என்னும் இடத்தில் முதல் முதலாக பிரிட்டிஷ் படையுடன் மோதத்
தொடங்கியது.
அது திட்டமிடாத போர். சரியான தளபதி யாரும் கிடையாது. ‘எதற்கும் சண்டை போட்டுக்கொண்டிருங்கள்; உருப்படியான ஒரு தளபதியைப் பிடித்துக்கொண்டு வருகிறோம்’ என்று காலனி நாடுகளின் கூட்டமைப்பு
அதிகாரிகள் தம் வீரர்களிடம் சொல்லிவிட்டு, தளபதி ‘தேட’ ஆரம்பித்தார்கள்.
வர்ஜீனியாவில் ஒரு தோட்டப்பண்ணை முதலாளியாயிருந்த ஒருத்தரை கட்டக்கடைசியில் கண்டுபிடித்துக்
கொண்டுவந்து ‘இவர்தான் தளபதி’ என்று முன்னிறுத்தினார்கள்.
காலனிப் படையினருக்கு அவரை முன்னதாக அவ்வளவாகத் தெரியாது. ஏன், யுத்த நிர்வாகிகள் பலருக்கே கூட அவர் புதுமுகம். மக்களுக்கு? கேட்கவே வேண்டாம்!
பலருக்கு அவர் பெயர் கூடத் தெரியாது. ஆனால், அந்தத் தோட்டப் பண்ணை முதலாளிதான் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றி எழுதினார். ‘அமெரிக்காவின் தந்தை’ என்று பின்னாளில் வருணிக்கப்பட்டார். அவர் பெயர் ஜார்ஜ் வாஷிங்டன்.
***
 தொடறும்...

2 comments: